சுடச்சுட

  

  அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள் உண்ணாவிரதம்

  By சிதம்பரம்,  |   Published on : 27th December 2016 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஊதிய குறைப்பு, பணப் பயன், பதவி உயர்வு வழங்காதது, அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்காதது உள்ளிட்டவற்றைக் கண்டித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
   சிதம்பரம் காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார். போராட்டத்தை தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் எம்.விஜயக்குமார் தொடக்கி வைத்தார்.
   திமுக முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமாகா மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.வேல்முருகன், தமிழக சமாஜ்வாதி கட்சித் தலைவர் இளங்கோ யாதவ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பால.அறவாழி,
   பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாவட்டச் செயலாளர் செல்வ.மகேஷ், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் வே.ராஜரத்தினம், மக்கள் அதிகாரம் தலைவர் வழக்குரைஞர் சி.ராஜூ, பல்கலைக்கழக ஆசிரியர் நலச்சங்கத் தலைவர் செல்வக்குமார், அம்பேத்கர் ஆசிரியர் சங்கத் தலைவர் அசோகன், பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்ப ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் முத்துவேலாயுதம், ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் சி.சுப்பிரமணியன், பல்கலைக்கழக முன்னாள் ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன், எஸ்சி., எஸ்டி ஆசிரியர் நலச்சங்க நிர்வாகி நீதிவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
   உண்ணாவிரதத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் முடித்து வைத்துப் பேசினார்.
   போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
   போக்குவரத்து பாதிப்பு: சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் வாகனங்களில் வந்ததால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் அவதியுற்றனர்.
   பேருந்துகள், பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து செல்வதில் நெருக்கடி ஏற்பட்டது. போராட்டத்தை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai