சுடச்சுட

  

  தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, கடலூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும்.
   உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், பயிர் காப்பீட்டுத் திட்ட இழப்பீட்டை உடனடியாக வழங்குதல், பருவமழை பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்து, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
   பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்குதல், பயிர் பாதிப்பு அதிர்ச்சியில் இறந்த விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியத்தை ரூ.400ஆக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டிருந்தது.
   இதன்படி, சங்கத்தினர் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஆர்.சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் வி.எம்.சேகர் ஆகியோர் தலைமையில் கடலூரில் தலைமை தபால் நிலையம் அலுவலகம் அருகே திங்கள்கிழமை குவிந்தனர்.
   அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பின்னர், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி மறுக்கவே, கடலூர்-புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
   இதனைத் தொடர்ந்து ஏஐடியூசி மாவட்ட துணைத் தலைவர் டி.மணிவாசகம், மாவட்ட பொதுச் செயலர் பி.துரை, துணைத் தலைவர் வி.குளோப், வி.தொ.சங்க மாவட்டத் தலைவர் ஏ.பி.நாகராஜன், பொருளர் வி.பட்டுசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட சிறப்புத் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன், துணைத் தலைவர்கள் கே.எஸ்.செல்வராஜ், வி.இளையபெருமாள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai