சுடச்சுட

  

  வட்டார மருத்துவமனைகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு: எஸ்.பி. ஏற்பாடு

  By கடலூர்  |   Published on : 27th December 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் உள்ள வட்டார மருத்துவமனைகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு மாவட்ட எஸ்.பி. ஏற்பாடு செய்துள்ளார்.
   சாதாரண அடிதடி பிரச்னை முதல் கொலை வழக்குகள் வரையில் சம்பந்தப்பட்டவர்கள் முதலில் தங்களது காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கே செல்வார்கள்.
   அந்த மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு சந்தேகத்துக்கு இடமான வகையில் காயங்களுடன் சிகிச்சை பெறுபவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்படும்.
   அந்தத் தகவல் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, காவல் நிலையத்திலிருந்து விசாரணை அலுவலர்கள் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
   சில நேரங்களில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் காவலரின் விசாரணைக்குப் பின்னர் தப்பியோடுவதும், அடிதடி பிரச்னையில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்குள் மோதல் ஏற்படும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதற்கு புறக்காவல் நிலையங்களில் போதுமான காவலர்கள் நியமனம் செய்யப்படாததே காரணமாகும்.
   இந்தப் பிரச்னையை ஆராய்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் தற்போது புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
   அதன்படி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய வட்டார மருத்துவமனைகளில் கூடுதல் போலீஸாரை பணிக்கு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் தலைமை மருத்துவமனைக்கு கூடுதலாக 4 போலீஸார், மற்ற மருத்துவமனைகளுக்கு கூடுதலாக தலா 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது வாக்கி-டாக்கி வழங்கப்பட்டுள்ளது.
   கூடுதலாக நியமிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குள் ரோந்து செல்வதோடு, பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டால், உடனடியாக காவல்துறைக்கு தெரிவிப்பதோடு, பிரச்னைகளை தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai