சுடச்சுட

  

  வழக்குகளை வாபஸ் பெறக் கோரி எஸ்.பி.யிடம் கிராம மக்கள் மனு

  By கடலூர்,  |   Published on : 28th December 2016 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி, கிராம மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
   கடலூர் வட்டம், சேடப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது காமராஜர் காலனி. இதன் அருகிலுள்ள பகுதி நாகம்மாள்பேட்டை கிராமம். இரு பகுதியினருக்கும் கடந்த சில நாள்களாக பிரச்னை ஏற்பட்டு அண்மையில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
   இதுதொடர்பாக, கடலூர் முதுநகர் போலீஸார் இரு தரப்பினர் மீது 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும், இரு தரப்பைச் சேர்ந்த 34 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையின் கைது நடவடிக்கைக்கு பீதியடைந்து ஆண்கள், இளைஞர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே சென்று தலைமறைவாகியுள்ளனர்.
   இதையடுத்து, இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் இல.திருமேனி தலைமையில் வந்தனர்.
   பின்னர், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அதில், காமராஜர் காலனி பகுதியில் உள்ள மதுக் கடையில் மது அருந்த வருவதிலிருந்து பிரச்னை உருவாகி வருகிறது. எனவே, அந்தப் பகுதியிலுள்ள மதுக் கடையை அகற்ற வேண்டும். இரு தரப்பினரும் இனிமேல் பிரச்னையில் ஈடுபடுவதில்லை என்று
   முடிவெடுத்துள்ளதால் இருதரப்பினர் மீதான வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதில், காமராஜ் காலனியைச் சேர்ந்த வீ.அர்ச்சுனன், நாகம்மாள்பேட்டையைச் சேர்ந்த அஞ்சாபுலி, ஜெயபால், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஏ.ஜெயகுமார், கி.பி.புருஷோத்தமன், ஜெயசீலன் மற்றும் இரு கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai