சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு: ஆட்சியர்

    By கடலூர்,  |   Published on : 30th December 2016 04:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    baby-jewelry-for-girls-first-birthday

     

    கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் கூறினார்.
     "பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' திட்டம் குறித்த 3 சக்கர வாகன (ஆட்டோ) விழிப்புணர்வுப் பேரணி, கடலூர் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. பேரணியை ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தொடக்கி வைத்தார். பேரணியில் சுமார் 50 வாகனங்கள் பங்கேற்று, பாரதிசாலை, அண்ணா மேம்பாலம், சிதம்பரம் சாலை வழியாக பேருந்து நிலையம் வரை சென்றன. வாகனங்களில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றன.
     நிகழ்ச்சியில் ஆட்சியர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 2014- ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 854-ஆக இருந்தது.
     எனவே, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசின் மூலம், "பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டம் கடலூர் உள்ளிட்ட நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது.
     இத்திட்டம் மூலம் 2016-ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 895-ஆக அதிகரித்துள்ளது.
     செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 58,986 பெண் குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
     இதுபோல் பல்வேறு நடவடிக்கைகளால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
     மேலும், ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில், பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், மரக்கன்றுகள் மற்றும் அம்மா பெட்டகம் ஆகியவை வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
     கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவித்த 6 ஸ்கேன் மையங்கள் மூடப்பட்டுள்ளன. 3 ஸ்கேன் மையங்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.
     நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கோ.அன்பழகி, துணை இயக்குநர் (சுகாதாரம்) கே.ஆர்.ஜவஹர்லால், மாவட்ட சமூக நல அலுவலர் ச.மீனா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஏ.அங்கமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறு சேமிப்பு) நாகலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai