சுடச்சுட

    

    போலீஸார் தொடர்ந்து ரத்த தானம் வழங்க நடவடிக்கை: எஸ்பி விஜயகுமார்

    By கடலூர்,  |   Published on : 30th December 2016 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டக் காவல் துறையினர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து ரத்த தானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் கூறினார்.
     கடலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், அரசு ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியிலிருந்து நோயாளிகளின் தேவைக்காக பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கும் ரத்தம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
     அதன்படி கடலூர் மாவட்டக் காவல் துறை சார்பில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி, புதுக்குப்பத்தில் உள்ள காவலர் மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் தலைமை வகித்து, முகாமை தொடக்கி வைத்தார்.
     இதில், காவல் துறையைச் சேர்ந்த 30 பேரும், ஊர்க் காவல் படையினர் 100 பேரும் ரத்த தானம் அளித்தனர். அதிக முறை ரத்த தானம் அளித்தவர்களுக்கு கண்காணிப்பாளர் சான்றிதழ்களை வழங்கினார்.
     பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் 4,500 யூனிட் வரை மட்டுமே ரத்த தானம் கிடைக்கிறது. எனவே இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காவல் துறையினரின் பங்களிப்பை வழங்கும் வகையிலும் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் துறையினர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து ரத்தம் தானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரசு ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ஜி.சாய்லீலா கூறுகையில், தானமாகப் பெறப்படும் ரத்தமானது, ரத்த அணுக்கள், பிளாஸ்மா, தட்டணுக்கள், கிரையோபிசியேடட் என 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு அதன் தன்மைக்கேற்ப வழங்கப்படுகின்றன.
     சில வகைகளை 5 நாள்கள் முதல் ஓராண்டு வரை கையிருப்பில் வைத்து பயன்படுத்த முடியும். இதற்கான ரத்த வகை பிரிப்பு இயந்திரம் அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 25 முதல் 30 யூனிட் ரத்தம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ரத்த தானம் வழங்க முன்வர வேண்டும் என்றார்.
     நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் க.திருமலைச்சாமி, ப.மதிவாணன், ஊர்க் காவல் படை வட்டார தளபதி ஆர்.சுரேந்தர்குமார், துணைத் தளபதி ஜெயந்தி ரவிச்சந்திரன், காவலர் மருத்துவமனை தலைமை மருத்துவர் சாராசெலீன்பால், காவல் ஆய்வாளர் சிவசங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     புத்தாண்டுக் கொண்டாட்டத்தில்
     600 போலீஸார் பாதுகாப்பு
     எஸ்பி மேலும் கூறுகையில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து தேவாலயங்கள், முக்கிய இந்துக் கோயில்களில் 31-ஆம் தேதி இரவு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இந்தப் பணியில் 600 போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்.
     கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் அடுத்தவர்களைப் பாதிக்காத வகையில் நடந்துகொள்ள வேண்டும். ஒழுங்கிணை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai