சுடச்சுட

    

    ரூபாய் நோட்டு விவகாரம்: வங்கிகளை முற்றுகையிட்டு வி.சி.க. போராட்டம்

    By DIN  |   Published on : 31st December 2016 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு வங்கிக் கிளைகளை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மத்திய அரசு கடந்த நவ.8-இல் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்புச் செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, வங்கிகள், ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும், அரசின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதாகவும் கூறி, கடலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வங்கிகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
     அதன்படி, கடலூர் முதுநகர் எஸ்பிஐ வங்கிக் கிளை எதிரே, முதுநகர செயலர் சேதுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர்  பா.தாமரைச்செல்வன் கண்டன உரையாற்றினர். புதுநகர் எஸ்பிஐ வங்கிக் கிளையை நகரச் செயலர் செந்தில் தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன் கண்டன உரையாற்றினார்.
    பண்ருட்டி: பண்ருட்டியில், கடலூர் சாலையில் உள்ள சென்ட்ரல் வங்கி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலர் (கிழக்கு) கார்த்திகேயன் தலைமை வகித்தார். பொருளர் பகலவன், துணைச் செயலர்கள் செளந்தர், சந்தானம், செந்தில், துணை அமைப்பாளர் நாவலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
     இதேபோல், கும்பகோணம் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலர் (மேற்கு) கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர் வெங்கிடசாமி, நகர இணைச் செயலர் ராஜீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     வடலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலர் (மேற்கு) ப.சிவசக்தி தலைமை வகித்தார். துணைச் செயலர்கள் எம்.ஜி.ஆர், வ.க.பார்த்திபன், த.வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலச் செயலர் சு.திருமாறன், மாநில வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலர் கணே.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     இதேபோல் குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம் உள்பட 27 இடங்களில் கட்சியினர் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் திருமாறன், குரு, கார்த்தி, புலிக்கொடியன், மொ.வீ.சக்திவேல், பெ.பாவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai