சுடச்சுட

  

  மணிலா மகசூல் அதிகரிக்க நுண்ணூட்டச் சத்து அவசியம்: வேளாண் துறை அறிவுறுத்தல்

  By கடலூர்  |   Published on : 23rd January 2016 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மணிலாவில் மகசூல் அதிகரிக்க நுண்ணூட்டச் சத்து அவசியம் என்று வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் பொ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மணிலா பயிருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்களைத் தவிர மிக குறைந்த அளவில் போரான், துத்தநாகம், இரும்பு தாமிரம், மாங்கனீஸ் மற்றும் மாலிப்டீனம் போன்ற 6 வகை நுண்ணூட்டச் சத்துக்களும் அவசியம். இவை குறைந்த அளவில் தேவைப்பட்டாலும் இவற்றை பயிருக்கு அளிக்காவிட்டால் மகசூல் இழப்பு ஏற்படும். ஒரே பயிரை திரும்ப, திரும்ப பயிர் செய்வதால் இந்தச் சத்துக்கள் மண்ணில் இல்லாமல் போகின்றன. மேலும், சுண்ணாம்புத் தன்மை உள்ள நிலங்களில் இச்சத்துக்களை பயிர் எடுத்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால், நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.

  நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறையை சில அறிகுறிகளின் மூலமாக தெரிந்துகொள்ளலாம். அதன்படி மஞ்சள் மற்றும் வெளிர் பச்சை நிறப்பட்டைகள் நீளவாக்கில் இலை முழுவதும் தென்படும். நடுநரம்பு தவிர்த்து மற்ற இடங்களில் மஞ்சள் நிறமாக மாறி இருக்கும். இலைகள் சிறுத்து இலை ஓரம் மேல்நோக்கி வளைந்து கிண்ணம்போல் காட்சியளிக்கும். இலைகள் வெளிரி உள்பக்கம் சுருண்டு காணப்படும். இலைகள் நடுநரம்பைச் சுற்றி திட்டுத் திட்டாக பச்சை, மஞ்சள் நிறங்கள் மாறி, மாறி காணப்படும். மணிலா பருப்பில் நடுவில் பள்ளம் ஏற்பட்டு பயிருக்கு சேதம் ஏற்படும்.

  எனவே, ஏக்கருக்கு மணிலா நுண்ணூட்ட கலவை 5 கிலோவுடன், காய்ந்த மணல் 20 கிலோ எடுத்து நன்றாக கலந்து அடியுரமாக  சீராக தூவ வேண்டும். தூவிய பிறகு மண்ணை கிளறக் கூடாது. ஏனெனில் கிளறினால் சத்துக்கள் அடியில் போய் செடிக்கு கிடைக்காமல் போகலாம். அடியுரமாக போடி முடியாத சூழ்நிலையில் மண்ணில் ஈரம் இருக்கும் போது மேலுரமாகவும் இடலாம். எனவே, மணிலா சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் நுண்ணூட்டச் சத்து இடுவது அவசியம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai