சுடச்சுட

  

  கடலூர் நகர் மன்ற உறுப்பினர்கள் 6 பேர் இடைநீக்கம்

  By கடலூர்  |   Published on : 01st March 2016 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் நகர்மன்றக் கூட்டத்தில் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் திங்கள்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

  கடலூர் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன் தலைமை வகிக்க, துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் திமுக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச முற்பட்டனர். அப்போது, அதிமுக தரப்பினரும் பேச எழுந்தனர். அதிமுக உறுப்பினர்கள் பேசிய பின்னர் மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தலைவர் கூறினார்.

   இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கறுப்புத் துணியை வாயில் கட்டிக்கொண்டு கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்றனர்.

  இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து வாயில் கறுப்புத்துணி கட்டிய 6  உறுப்பினர்களையும் இடைக்கால நீக்கம் செய்வதாக நகர்மன்றத் தலைவர் அறிவித்தார். இதையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  நகர்மன்றத் தலைவர் கூறுகையில், கடந்த கூட்டத்திலேயே திமுக, பாமக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டபோது எச்சரிக்கப்பட்டனர். தற்போது கூட்ட நடவடிக்கைக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படும் வகையிலான செயலில் திமுக, பாமக, தேமுதிக, தமாகா உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

  பேச வாய்ப்பளிப்பதாகக் கூறியும் வாயில் கறுப்புத்துணி கட்டிக் கொண்டு அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்தனர். இதனால் திமுக உறுப்பினர்கள் பி.நடராஜன், நா.தமிழரசன், பாமக உறுப்பினர்கள் போஸ் ராமச்சந்திரன், டி.சரவணன், தமாகா உறுப்பினர்

  கே.சர்தார், தேமுதிக உறுப்பினர் ஜி.தட்சிணாமூர்த்தி ஆகியோர் 3 கூட்டங்களில் பங்கேற்க இடைக்காலத் தடை விதித்து கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். பின்பு, 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.

  முன்னதாக, தனது 37ஆவது வார்டில் 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் அளவுக்கு மட்டுமே பணிகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி அதிமுக உறுப்பினர் த.வினோத்ராஜ் வெளிநடப்பு செய்தார்.

  கூட்டத்தில் உறுப்பினர்கள் வ.கந்தன், கே.தமிழ்ச்செல்வம், ஜெ.அன்பு, எம்.ஜீவா, பி.சங்கர், எம்.கே.உதயமாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  கூட்டத்தில் பங்கேற்காத ஆணையர்

  கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் நகராட்சி ஆணையரை மாற்ற வேண்டும் என அதிமுகவினரும், பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தலைவருக்கு நெருக்கடி அளித்தனர். அப்போது சபை நடவடிக்கையில் ஆணையர் ரா.முருகேசன் பங்கேற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கடந்த 3 கூட்டங்களிலும் ஆணையர் பங்கேற்கவில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai