சுடச்சுட

    

    வெள்ள நிவாரணம் கோரி ஆட்சியரகத்தில் குவியும் மக்கள்

    By கடலூர்  |   Published on : 01st March 2016 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் திரளானோர் குவிந்தனர்.

    மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த மக்கள், சுமார் 350-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர். இதில், 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் வெள்ள நிவாரணம் சம்பந்தப்பட்டவை எனக் கூறப்படுகிறது.

     மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழையினால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதோடு, குடியிருப்புகளும் கடும் சேதத்தை சந்தித்தன. பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி முதல்கட்டமாக நிவாரணத் தொகையை வழங்கி வருகிறது. எனினும், ஏராளமானவர்கள் நிவாரண உதவி கிடைக்கவில்லை எ புகார் தெரிவித்து வருகின்றனர்.

     திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடலூர் நகர ஒருங்கிணைப்பாளர் டி.பாலு தலைமையில் மனு அளித்தனர். அதில், கடலூர் வட்டம் சுப்பிரமணியபுரத்தில் சுமார் 150 குடும்பத்தினருக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லையென புகார் கூறினார்.

     அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், மாவட்டம் முழுவதும் வெள்ள நிவாரணம் முழுமையாக வழங்கப்பட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைத்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

     விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மற்றொரு மனுவில், தோட்டப்பட்டு கிராமத்தில் 50 குடும்பத்தினருக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பண்ருட்டி வட்டம் பணிக்கன்குளத்தைச் சேர்ந்த திரளானோர் வந்திருந்து வெள்ள நிவாரணம் கோரி மனு அளித்தனர்.

    இவ்வாறு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெள்ள நிவாரணம் கோரி மனு அளிப்பதற்காக ஏராளமானவர்கள் ஆட்சியரகத்துக்கு வந்திருந்தனர்.

    சரக்கு வாகனங்கள் பறிமுதல்

    வெள்ள நிவாரணம் கோரி மனு கொடுப்பதற்காக கிராமங்களிலிருந்து  மொத்தமாக வருபவர்கள் தங்களது பயணத்துக்கு சரக்கு வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஆட்சியரகம் வந்திருந்த 4 சரக்கு வாகனங்களை கடலூர் புதுநகர் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனால், கிராம மக்கள் தவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai