சுடச்சுட

  

  ஆட்சியரகம் அருகே பயன்பாட்டுக்கு வராத நவீன நிழற்குடை

  By கடலூர்  |   Published on : 03rd March 2016 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்ட ஆட்சியரகம் அருகே குளிர்சாதன வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை கட்டடம், மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  கடலூர் மஞ்சக்குப்பத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சிப் பண்ணைக்கு மாற்றப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

  ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ரூ.20 லட்சம் செலவில் 2 பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டடங்கள் அமைக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. இதில் ஒரு கட்டடம் குளிர்சாதன வசதியுடன் உள்ளது. ஆனால், இந்தப் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டடம் கடந்த 3 நாள்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

  இதனால், ஆட்சியரகத்துக்கு தினமும் வந்து செல்லும் மக்கள் பேருந்து நிறுத்த கட்டடத்தை பயன்படுத்த முடியாத  நிலை நீடிக்கிறது

  மேலும், ஆட்சியரகம் வழியாகச் செல்லும் சாலையானது ஒருவழிச் சாலையாகும். கடலூரிலிருந்து புதுச்சேரி, சென்னை செல்லும் பேருந்துகள் இச்சாலை வழியாகச் செல்லும்.

   எனவே, கடலூரிலிருந்து ஆட்சியரகம் வரும் மக்கள் இப்பேருந்துகளைப் பயன்படுத்துவார்கள்.

   இவர்கள் மீண்டும் கடலூருக்குச் செல்ல வேண்டும் என்றால், ஆட்டோ அல்லது பேருந்து மூலமாக ஆல்பேட்டைக்குச் சென்று, அங்கிருந்து வேறு வாகனத்தில் தான் கடலூர் செல்ல முடியும்.

  குளிர் சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைக் கட்டடமானது, பேருந்துகள் செல்லாத பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்துக்காகவோ அல்லது ஆட்டோவுக்காகவோ காத்திருப்பவர்கள், குளிர்சாதன வசதியில்லாத நிழற்குடை கட்டடத்தில்தான் நிற்க வேண்டியுள்ளது.

  எனவே, மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பேருந்து நிறுத்தப் பகுதியில் குளிர்சாதன பேருந்து நிறுத்தக் கட்டடம் கூடுதலாக அமைக்க வேண்டும்.

   மேலும், குளிர்சாதன பேருந்து நிறுத்தத்தையும் தினமும் திறந்து வைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், குளிர்சாதன வசதியுள்ள பேருந்து நிறுத்தத்தில் வங்கி ஏடிஎம் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai