சுடச்சுட

    

    மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கட்சியினர் தங்களது கொடிக்கம்பம், விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் கூறினார்.

    மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், துணைத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது:

    பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள், கொடிக்கம்பங்களை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கொடிக்கம்பம், பதாகைகள் அகற்றப்படுவதோடு, விளம்பரம் அழிக்கப்பட்டு அதற்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

     அதேபோல் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ள 130 நடத்தை விதிகளை மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் பணம், மது கடத்தலைத் தடுக்கும் வகையில் 4 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கடலிலும் சோதனை நடத்துவதற்கு கடலோர காவல் படையினருடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

     கூட்டத்தில் அதிமுக நகரச் செயலர் ஆர்.குமரன், மீனவரணிச் செயலர் கே.தங்கமணி, திமுக நிர்வாகி நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் கோ.மாதவன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai