Enable Javscript for better performance
அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் அழிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மாவட்டத்தில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 4-ல் வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரம் முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் அலுவலகம் உள்பட அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் முதல்வர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி உள்ளாட்சித் தலைவர்களின் புகைப்படங்களை அரசுக் கட்டடங்களிலிருந்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும், அரசுக் கட்டடங்கள், தனியார் கட்டடங்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்களையும், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டுமென ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்திருந்தார். இதனை மேற்கொள்ளாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    எனினும், அரசியல் கட்சியினரில் பலர் தாங்களாகவே முன்வந்து சுவர் விளம்பரங்களை அழிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளின் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    அதில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். மேலும், விளம்பரப் பதாகைகள், கொடிக் கம்பங்களை அகற்றும் பணியிலும் ஈடுபட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இப்பணியில் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்பணிகள் மேலும் 2 நாள்களுக்கு நீடிக்கும் என பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai