சுடச்சுட

    

    மாவட்டத்தில் தேர்தல் பணியில் காவல்துறையினர் 2,145 பேர் உள்ளிட்ட சுமார் 20 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே 16ஆம் தேதி நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் சனிக்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: தேர்தல் தேதி வெளியிடப்பட்ட நாள் முதல் தேர்தல் பணி முடிவடையும் வரை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நன்னடத்தை நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதிக்கும் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்களைக் கொண்டு தலா 3 பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 2,256 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 தொகுதிகளுக்கும் 189 மண்டல அலுவலர்கள் குழு, ஊடக சான்றிதழ் கண்காணிப்புக்குழு, தேர்தல் செலவின கணக்கீட்டுக்குழு மற்றும் கண்காணிப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 11,545 தேர்தல் பணியாளர்கள், 2,145 காவல்துறையினர், 490 நுண்ணிய பார்வையாளர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர் உள்பட 20 ஆயிரம் பேர் பயன்படுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் 3 வாக்குச்சாவடிகள் நெருக்கடியானவை என்றும், 116 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் காவல்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னரே பதற்றமான தொகுதிகள் குறித்து அறிவிப்பார்கள்.

    அனைத்துக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகையில் தேர்தலை சிறப்பாக நடத்திட மாவட்டநிர்வாகம் முழு ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதனை மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் உடனிருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai