சுடச்சுட

    

    மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி திமுக-காங்கிரஸ்:தமிழிசை

    By நெய்வேலி  |   Published on : 07th March 2016 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக-காங்கிரஸ் கூட்டணி, ஏற்கெனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

    நெய்வேலியில் 500-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில் தோப்புக்கொல்லை செல்வமணி, மேல்வடகுத்து சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியது:

    சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். பாஜக பலம் பொருந்திய கட்சியாக, திராவிடக் கட்சிகளுக்கு சவாலாக வளர்ந்துள்ளது.

    எங்களது கட்சியில் 50 லட்சம் இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 60 ஆயிரம் வாக்குச் சாவடி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மக்கள் நலக் கூட்டணி, மக்கள் நலன் மீது அக்கறையில்லாத கூட்டணி. திமுக-காங்கிரஸ் கூட்டணி, ஏற்கெனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. இவ்விரு கட்சிகளும் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளன. ஊழலற்ற, வளர்ச்சிக்கான ஆட்சியை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது.

    தேர்தல் கூட்டணி குறித்து மேலிடப் பொறுப்பாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அண்மையில் பல அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார் அவர்.

    நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் தேவ சரவணசுந்தரம் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலர் ஆதவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். வர்த்தகப் பிரிவு மாநிலக்குழு உறுப்பினர் ஜெ.வினோத்குமார், அமைப்புச் செயலர் ஆர்.பி.செல்வம், முன்னாள் மாவட்டத் தலைவர் சுகுமாறன், ஆதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai