Enable Javscript for better performance
உண்டியல் பணம் திருட்டு: 4 இளைஞர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி, கடலூர் சாலையில் உள்ள தேவாலயத்தில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய நான்கு இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    பண்ருட்டி, கடலூர் சாலையில் ஆற்காடு லுத்தரன் திருச்சபை உள்ளது. இந்த திருச் சபையில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.  சனிக்கிழமை காலை திருச்சபை ஊழியர் ரவிக்குமார் வந்து திருச்சபையை திறந்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து, திருச்சபையின் பஞ்சாயத்து குழுச் செயலர் ஆர்.பாலகிருஷ்ணன், பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரில் உண்டியலில் ரூ.20 ஆயிரம் இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில், உண்டியல் திருட்டில் தொடர்புடைய 4 இளைஞர்கள் லிங்க் ரோட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸார் அங்கு சென்று அவர்களை கைது செய்தனர்.

    விசாரணை நடத்தியதில், அவர்கள் திருவதிகை, அப்பர் தெரு பாண்டியன் மகன் பாலாஜி (19), மேலப்பாளையம், பஜனை மடத் தெரு சுப்பிரமணியன் மகன் மணிராஜா(20), வீராசாமி மகன் தேவா (19), திருவதிகை, முருகன் கோயில் தெரு சங்கர் மகன் நவீன்குமார் (19) என்பதும், திருச்சபை உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியதும் தெரியவந்தது.

    மேலும், உண்டியலில் ரூ.12 ஆயிரம் இருந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூ. 6 ஆயிரத்தை போலீஸார் கைப்பற்றினர்.

    இதையடுத்து, போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாஸ்டர் பள்ளியில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai