Enable Javscript for better performance
வீட்டு வசதித் துறை அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் கூட்டுறவு வீட்டு வசதித் துறை மண்டல துணைப் பதிவாளர் அலுவலகத்தை, சங்கத்தின் இயக்குநர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

    கடலூர் பொது ஊழியர்கள் கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம், புதுப்பாளையத்திலுள்ள சங்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் இயக்குநர்கள் கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றபோது கூட்டரங்கம் பூட்டப்பட்டிருந்ததாம்.

    இதுதொடர்பாக சங்க இயக்குநர்கள் வீட்டுவசதித் துறை சார் பதிவாளரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லையாம். இதனையடுத்து கடலூர் தெற்கு கவரைத் தெருவிலுள்ள வீட்டுவசதித் துறை மண்டல துணைப் பதிவாளர் அலுவலகத்துக்கு சங்கத் துணைத்தலைவர் எஸ்.ராமு, இயக்குநர்கள் கே.அய்யனார், ஏ.கருணாநிதி, ஏ.கிருஷ்ணராஜ், எஸ்.தனசேகர், பி.ஜெயக்குமார், ஜி.வைத்தியநாதன் ஆகியோர் சென்று முற்றுகையிட்டனர்.

    கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டும், சார் பதிவாளர் வராதது குறித்து கேள்வியெழுப்பினர். கூட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடையாணை விதித்துள்ளதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால், அதற்கான ஆணையை காண்பிக்க மறுத்து விட்டனராம்.

    இதுகுறித்து துணைத்தலைவர் எஸ்.ராமு கூறுகையில், கடந்த 2013ஆம் ஆண்டில் சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் 10 இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 2 கூட்டங்கள் மட்டுமே நடந்துள்ளது. தலைவர் மீது பல புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து 10 இயக்குநர்களும் சேர்ந்து அவரை பதவி நீக்கம் செய்தோம். ஆனால்,

    இதுதொடர்பாக நீதிமன்றத்துக்குச் சென்றதைத் தொடர்ந்து கூட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டும் தற்போது கூட்டம் நடத்தப்படவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai