சுடச்சுட

  

  கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்த வடலூர் வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

  By கடலூர்  |   Published on : 13th March 2016 07:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சத்தீஸ்கரில் கண்ணிவெடி தாக்குதலில் வீரமரணம் அடைந்த வடலூரைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப்படை வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

  கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ரங்கராகவன் (40). மத்திய பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலராக சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமை சுக்மா மாவட்டம், முரளிகுடா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்தது. இதில், ரங்கராகவன் வீரமரணம் அடைந்தார்.

  இதையடுத்து அவரது உடல் சனிக்கிழமை வடலூர் கோட்டக்கரைக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

  கடலூர் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார், கோட்டாட்சியர் என்.உமாமகேஸ்வரி ஆகியோர் அரசு சார்பில் ரங்கராகவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது குடும்பத்துக்கு அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது. பொதுமக்கள் திரளானோர் ரங்கராகவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  இதனைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் ரங்கராகவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  அவருக்கு மனைவி சுதா (33), மனோஜ் (5), நாகார்ஜுன் (3) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai