சுடச்சுட

    

    வாகனம் வழங்குவதில் தாமதம்: பறக்கும்படை பணிகளில் சுணக்கம்

    By கடலூர்  |   Published on : 13th March 2016 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக அமைக்கப்பட்ட பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்களில் பெரும்பாலான குழுக்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாததால் கண்காணிப்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. கட்சியினர் தங்களது கொடிக்கம்பங்கள், விளம்பரப் பதாகைகளை அகற்றுதல், சுவர் விளம்பரங்களை அழித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தி வந்த அரசு வாகனங்களையும் பெற்றுக்கொண்டது.

    தேர்தலில் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.  இதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 3 பறக்கும்படைகளும், நிலையான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் வட்டாட்சியர் அளவிலான வருவாய்த்துறை அலுவலர் தலைமையில், காவல் ஆய்வாளர் அல்லது உதவியாளர், 2 காவலர்கள் இடம் பெற்றுள்ளனர். பறக்கும் படையினர் அந்தந்தத் தொகுதிகளில் முக்கிய சாலைகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபடுவதோடு, பணம் பட்டுவாடா குறித்து கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்த வேண்டும். நிலையான கண்காணிப்புக் குழுவினர் தொகுதிக்குள் நுழைவதற்கான முக்கியச் சாலையில் நிலையாக சோதனைச் சாவடி அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

    இவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று சோதனை நடத்தும் வகையில் ஒவ்வொரு குழுவினருக்கும் வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு தொகுதிக்கு 6 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

     ஆனால், இதில் பெரும்பாலான குழுவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகனங்கள் இதுவரை வழங்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், ஏற்கெனவே ஒதுக்கீடு பெற்ற வாகனங்களுக்கும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எரிபொருளுக்கான பணம் வழங்குவதில்லையாம். இதனால், வாகனம் பெற்றவர்களும் அதனை பயன்படுத்த முடியவில்லை.

     மற்ற மாவட்டங்களில் பறக்கும்படையினர் சோதனையிட்டு உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்துவரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் பறக்கும்படையினரின் செயல்பாடு வாகனப் பிரச்னையால் முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாவட்ட தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகனங்கள் உரிய அலுவலர்களுக்குச் சென்றுள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். அதேபோல் எரிபொருளுக்கு எந்த தலைப்பின் கீழ் பணம் பெறுவது என்பதற்கும் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் அனைத்து பறக்கும்படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் போது வாகனங்கள் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்களுக்கு முழுமையாக ஒப்படைக்கப்படுவதோடு அவர்களது பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai