சுடச்சுட

    

    பண்ருட்டி பகுதியில் விவசாயிகள் விளை பொருள்களை முக்கியச் சாலைகளில் விரித்து உலர வைப்பதால்  விபத்து அபாயம் நிலவுகிறது.

    பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டாரங்களில் நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, எள்ளு, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இதில் குறிப்பாக நெல், சோளம் ஆகியவை அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் பயிர்களை உலர் களத்தில் காய வைத்து, டிராக்டர் போன்ற வாகனங்களில் நசுக்கி தானியங்களை பிரித்தெடுக்க வேண்டும். இதற்காக அரசு சார்பில் கிராமப் பகுதிகளில் ஆங்காங்கே உலர் களங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

     குறுகிய அளவு நிலப்பரப்பில் விளைவிக்கப்படும் பயிர்களை விவசாயிகள் சிலர் சாலையில் பரப்பி தானியங்களை பிரித்தெடுக்கின்றனர். இந்த தானியங்களை டிராக்டர் உதவியுடன் பிரித்தெடுத்தால் கிடைக்கும் லாபம் வாகனத்தின் வாடகைக்கே போதாது என தெரிவிக்கின்றனர்.

     சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் இப்பயிர்களின் மீது செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது. சாலையில் விரிக்கப்படும் பயிர்கள் மீது வாகனங்கள் செல்லும்போது தூசு பறந்து வாகன ஓட்டிகள் கண்களில் அவை விழுவதால் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் கம்பு, கேழ்வரகு போன்ற தானியம் மீது செல்லும் வாகனங்கள் பிரேக் பிடிக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குகின்றன. குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்கு மேலூர் கிராமத்தில் சாலை உலர்களமாக பயன்படுத்துவதால் விபத்து அபாயம் நிலவுகிறது.

    இச்சாலை சிதம்பரம், வடலூர் பகுதிகளில் இருந்து நெய்வேலிக்கு செல்பவர்களும், வேலுடையான்பட்டு கோயிலுக்குச் செல்பவர்களும் பயன்படுத்தும் முக்கியச் சாலையாக உள்ளது. இதேபோல் பண்ருட்டி பகுதியில் பல சாலைகள் உலர் களமாக பயன்படுத்தப்படுகின்றன.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai