சுடச்சுட

  

  மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினருக்கான வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி திங்கள்கிழமை பொருத்தப்பட்டது.

  தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே 16ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அதனைக் கண்காணிக்கும் பணியில் பறக்கும்படை, நிலை கண்காணிப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வட்டாட்சியர் தலைமையிலான இப்படைகள் தலா 3 வீதம், 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் 54 படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெரும்பாலான படையினருக்கு உரிய வாகனங்கள் வழங்கப்படவில்லை எனவும், வழங்கப்பட்ட ஒருசில வாகனங்களுக்கும் எரிபொருளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், முதல்கட்டமாக இரு பிரிவு படையினருக்கும் 27 வாகனங்கள் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

  ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான எஸ்.சுரேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

  அப்போது ஆட்சியர் கூறுகையில், பறக்கும்படை, நிலை கண்காணிப்புப் படையினரின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 54 வாகனங்களுக்கும் இக்கருவி பொருத்தப்படும். இக்கருவியின் மூலமாக சென்னை மற்றும் கடலூரில் மாவட்ட அலுவலகத்திலிருந்து வாகனம் செல்லும் இடங்களைக் கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். இதன் மூலமாக எவ்விதமான குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாத வகையில் இப்படையின் செயல்பாடு இருக்கும் என்றார்.

  மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோ.ஷர்மிளா, தேர்தல் வட்டாட்சியர் ப.காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai