சுடச்சுட

  

  அரசியல் கட்சியினர் ஒலிபெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

  இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தேர்தலில் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்வதாலும், வாகனங்களில் ஒலி பெருக்கியினைப் பயன்படுத்துவதாலும் அதிகப்படியான ஓசையால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

  குறிப்பாக மாணவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாவதால் இந்திய தேர்தல் ஆணையம் இதனை கட்டுப்படுத்தும் விதமாக நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

   இதன்படி, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை மீறும் வாகனங்கள் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும். அனைத்து அரசியல் கட்சியினரும், ஒலிபரப்பு பிரசாரம் செய்வதற்கு எந்த வாகனம் பயன்படுத்தப்படுகிறது என்பதை உரிய அலுவலரிடம் தெரிவித்து அனுமதி பெற்ற பின்னரே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அனுமதி பெறப்பட்ட சான்றானது, பிரசார வாகனத்தில் ஒட்டப்பட வேண்டும். எந்த இடத்தில் வாகனப் பிரசாரம் நடைபெறுகிறது என்பதை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர், காவல்துறையினருக்கு தெரிவித்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். வாகன எண்ணின் பதிவு எண் கண்டிப்பாக அப்போது குறிப்பிட வேண்டும்.

   இவ்வாறு வழங்கப்படும் அனுமதியானது, வாக்களிக்கும் தேதியான மே 16ஆம் தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வரை மட்டுமே வழங்கப்படும். பிரசாரத்துக்கு கூம்பு வடிவ ஒலிபெருக்கியை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. பெட்டி வடிவ ஒலிபெருக்கி கருவியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  இந்த விதிமுறைகளை அனைத்துக் கட்சியினரும், வேட்பாளர்களும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai