சுடச்சுட

    

    வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 2,256 குழுக்கள் அமைப்பு

    By கடலூர்  |   Published on : 16th March 2016 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் மாவட்டத்தில் 2,256 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ஆம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ள அனைவரையும் வாக்களிக்கச் செய்து, 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலமாக மாற்றுவதற்கு தேர்தல் ஆணையம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

     இதன்படி கடலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற நிலையை எட்டும் வகையில் மாவட்ட நிர்வாகம் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    வாக்காளர்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலான விழிப்புணர்வுப் பதாகைகள் அமைப்பு, கையெழுத்து இயக்கம் நடத்துதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளது. அடுத்த கட்டமாக மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள 2,256 வாக்குச் சாவடிகளில் வாக்களித்தல் பங்கேற்பு விழிப்புணர்வுக் குழு (நயஉஉட) அமைக்கப்பட்டுள்ளது.

     இக்குழுவில் வாக்குச்சாவடி அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர், கிராம நிர்வாக அலுவலர், சுய உதவிக் குழுவினர் ஆகியோர் இடம் பெறுவார்கள். இவர்கள் கடந்த தேர்தல்களில் 40 சதவீதத்துக்கும் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விளக்குவார்கள். இதற்காக 40 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

     இதற்காக, திட்டக்குடி (தனி) தொகுதியில் 241 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், விருத்தாசலம் 272, நெய்வேலி 226, பண்ருட்டி 251, கடலூர் 228, குறிஞ்சிப்பாடி 251, புவனகிரி 288, சிதம்பரம் 253, காட்டுமன்னார்கோவில் (தனி) 246 குழுக்கள் வீதம் அமைக்கப்படுகிறது.

     மேலும் ஒவ்வொரு கிராமம் வாரியாக வீதி நாடகங்கள் நடத்துவது, தன்னார்வலர்கள் மூலமாக விழிப்புணர்வுப் பிரசாரங்களில் ஈடுபடுவது, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகித்தல் உள்ளிட்ட பணிகளிலும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

     இந்த பிரசாரங்கள் மூலமாக 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்ட முடியும் என மாவட்ட தேர்தல் அலுவலகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai