சுடச்சுட

  

  தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.80 லட்சம் கொள்ளை

  By சிதம்பரம்  |   Published on : 17th March 2016 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காட்டுமன்னார்கோவிலில் தனியார் நிதிநிறுவனத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.3.80 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

  கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே தனியார் நிதி நிறுவனம், வாடகை கட்டடத்தின் மாடியில் செயல்பட்டு வருகிறது.

  இந்நிறுவனத்தின் மூலம் பல்வேறு கிராமங்களிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலர் சிறு கடன் பெற்று வருகின்றனர்.

  நிறுவனத்தில் 9 அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். கோபாலகிருஷ்ணன் என்பவர் மேலாளராக உள்ளார்.

  இந்நிலையில், பணிநிமித்தமாக புதன்கிழமை நிறுவன ஊழியர்கள் 2 பேர் வெளியே சென்றுவிட்டனர். 7 பேர் மட்டும் பணியில் இருந்தனர். திடீரென முற்பகல் 11.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வண்டியை நிறுத்திவிட்டு, தலைக்கவசம் அணிந்து கொண்டு அலுவலகத்துக்கு உள்ளே சென்று, பணியில் இருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

  மேலும், மேலாளரிடம் சென்று அவர்கள், அவரை மிரட்டி அலுவலகத்தில் வைத்திருக்கும் பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர், வைத்திருந்த ரூ.3.80 லட்சம் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார்.

  அந்த நபர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு இருசக்கர வாகனத்தில் மணல்மேடு நோக்கி கொள்ளிடம் ஆற்றில் உள்ள பாலத்தை அதிவேகத்தில் கடந்து சென்றனர்.

  பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதால், அங்கு மிகவும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

  இதுகுறித்து, காட்டுமன்னார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai