சுடச்சுட

  

  நிவாரணம் வழங்கியதில் மோசடி: விவசாயிகள் தற்கொலை மிரட்டல்

  By நெய்வேலி  |   Published on : 17th March 2016 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் பலனில்லை என்பதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர்.

  கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக, செங்கால் ஓடை, பரவனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், குறிஞ்சிப்பாடி, வடக்கு, தெற்கு, ராஜாகுப்பம், ஓணாங்குப்பம், கல்குணம், ரெட்டிப்பாளையம், பூதம்பாடி, பரதம்பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

  மேற்கண்ட கிராமங்களில் இருந்த ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் மண்மேடிட்டும், மண் அரிப்பாலும், அத்து காணமுடியாமல் போய்விட்டன. இதற்கு அரசு நிவாரணமாக மண் அரித்து திசைமாறிய நிலத்துக்கு (ஏக்கர்) 14,400-ம், மண்மேடிட்ட மற்றும் அரிப்பு ஏற்பட்ட நிலங்களுக்கு ரூ.7,500-ம் இழப்பீடாக வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

  ஆனால், பாதிக்கப்பட்ட விளைநிலங்களை குறைவாக கணக்கிட்ட அதிகாரிகள், பாதிப்பே இல்லாத கிராமங்களுக்கு இழப்பீட்டு தொகை பல லட்சத்தில் வழங்கியுள்ளனராம்.இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரை சந்தித்து முறையிட்டுள்ளனர். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

  இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது:

  நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் குறிஞ்சிப்பாடி, வடக்கு, தெற்கு, ராஜாகுப்பம், ஓணாங்குப்பம், கல்குணம், ரெட்டிப்பாளையம், பூதம்பாடி உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த 750 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன.

  குறிஞ்சிப்பாடி, வடக்கு, தெற்கு, ராஜாகுப்பம், ஓணாங்குப்பம் உள்ளிட்ட  10 கிராமங்களில் உள்ள 300 ஏக்கர் நிலங்களுக்கு இழப்பீடாக அரசு ரூ.12.60 லட்சம் விடுவித்துள்ளது.

  அதே சமயம், எந்தவித பாதிப்பும் இல்லாத ரங்கநாதபுரம் கிராமத்துக்கு ரூ.39 லட்சமும், கட்டியங்குப்பம் கிராமத்துக்கு ரூ.85 லட்சமும், ஆயிகுப்பத்துக்கு ரூ.35 லட்சமும், மேலும் நைனார்குப்பம், பாச்சாரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு அதிகப்படியான பணம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.குறிஞ்சிப்பாடி, வடக்கு, தெற்கு பகுதியில் இன்னமும் கணக்கெடுப்பு முடியாமலே குழப்பம் நிலவுகிறது. பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிதி ஒதுக்காமல், பாதிப்பில்லாத கிராமங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததில் மோசடி நடந்துள்ளது.

  இதுதொடர்பாக மார்ச் 8-ம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்ததில், அவர், கோட்டாட்சியரிடம் புகாரை தெரிவிக்க கூறினார். புகாரை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாகவும், நிவாரணத் தொகை வழங்குவதை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி, வடக்கு, தெற்கு உள்ளிட்ட கிராமங்களுக்கான நிவாரணத் தொகையை வழங்காமல் நிறுத்திவிட்டு, பாதிப்பில்லாத மற்ற கிராமங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது.

  இதுகுறித்து, முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்ப உள்ளோம். அங்கும் நடவடிக்கை இல்லை என்றால் ஆட்சியர் அலுவலகம் முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு  செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai