Enable Javscript for better performance
சரநாராயணப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    பிரசித்திபெற்ற பண்ருட்டி, திருவதிகை ஹேமாம்புஜவல்லி சமேத சரநாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கோயிலின் கிழக்குப் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் 5 நிலை கோபுரம் புதிதாக அமைக்கப்பட்டது.

    கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 14ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. வெள்ளிக்கிழமை காலை கோ பூஜை, சுப்ரபாதம், புண்யாஹம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 10 மணியளவில் விமானங்கள், புதிய ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன.

    முனிஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேகம்

    இதேபோல் நெய்வேலி ஆதண்டார்கொல்லை கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனிஸ்வரன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி முதல்கால பூஜையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரம பிரதி சரம், கடஸ்தாபனம், தீபாராதனை, அஷ்டபந்தன பூஜை, வஸோத்தாரா ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

    வெள்ளிக்கிழமை 2ஆவது கால பூஜையுடன் ஸ்ரீமுனிஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். விழாவில்,  நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ராஜகோபால், ராஜாராம், ராஜமோகன், ராஜேந்திரன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai