பூத்துக் குலுங்கும் முந்திரி மரங்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி
By நெய்வேலி | Published on : 19th March 2016 06:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பண்ருட்டி பகுதியில் முந்திரி மரங்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இதனால் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முந்திரி மரங்கள் உள்ளன. பண்ருட்டி பகுதியில் மட்டும் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் இவ்வகை மரங்கள் உள்ளன.
ஒரு காலத்தில் மானாவாரியாக மேற்கொள்ளப்பட்டு வந்த முந்திரி சாகுபடியானது, தற்போது இறவை முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகசூலை அதிகரிக்க ஒட்டு ரகங்கள் பயிரிடப்பட்டு, அதிக விளைச்சல் தரும் வணிகப் பயிராகவும் மாறியிருக்கிறது.
பொதுவாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முந்திரி மரங்கள் பூத்துக் குலுங்கும். இதையடுத்து ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் அறுவடை மே மாதத்தில் உச்ச நிலையை அடைந்து, ஜூன் முதல் வாரத்தில் நிறைவடையும்.
ஜனவரி மாதத்தில் மழை பெய்தால் முந்திரி மரங்கள் பூப்பதில் சிக்கல் ஏற்பட்டு மகசூல் பாதிக்கும் என்பது விவசாயிகளின் கருத்து. நிகழாண்டில், ஜனவரி மாதம் மழை பெய்யவில்லை. அதற்கு முன்பு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த சாதகமான அம்சத்தால், தற்போது முந்திரி மரங்கள் அதிகளவில் பூத்துக் குலுங்குகின்றன.
இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது முந்திரி மரங்கள் பூக்கள், பிஞ்சுகளுடன் காட்சி அளிப்பது ரம்மியமான தோற்றத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
இந்த ஆண்டு மகசூல் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். தானே புயலுக்கு பின்னர் சில ஆண்டுகளாக முந்திரி மகசூல் அதிகரித்து வருகிறது.
முந்திரி பூக்கும் பருவத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தால், நோய் தாக்குதல் ஏற்பட்டு மகசூல் கடுமையாகப் பாதிக்கும். ஆனால் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகம் இல்லை. இதனால் முந்திரி மரங்கள் நோய் பாதிப்பில் இருந்து தப்பியுள்ளதாக தெரிவித்தனர்.