தொழிலாளி அடித்துக் கொலை: 5 பேர் கைது
By கடலூர் | Published on : 20th March 2016 07:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கடலூரில் தொழிலாளி ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் முதுநகர் பீமாராவ் நகரைச் சேர்ந்தவர் செ.மணிகண்டன் (45). தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் சரவணன், அதே பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மகள் திவ்யா என்பவரை திருமணம் செய்துகொண்டு அவரது வீட்டிலேயே வசித்து வந்தார்.
இந்த நிலையில் வேலாயுதத்தின் உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சிக்கு சீர் செய்வது தொடர்பாக சரவணனுக்கும், வேலாயுதத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சரவணனுக்கு ஆதரவாக அவரது தந்தை மணிகண்டன், தாயார் அருந்ததி, சகோதரர் பிரதாப் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு வேலாயுதம் வீட்டுக்கு வந்து தட்டிக்கேட்டுள்ளனர்.
அப்போது, இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதில் வேலாயுதம் தரப்பினர் இரும்பு கம்பி, கம்புகளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனராம். இச்சம்பவத்தில் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரும் காயமுற்றனர். உடனடியாக அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மணிகண்டன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் விசாரணை நடத்தி 9 பேர் மீது சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். மேலும், வேலாயுதம் (43), அவரது தரப்பைச் சேர்ந்த தினேஷ் (22), தேவநாதன் (42), சந்துரு (19), விக்னேஷ் (19) ஆகியோரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.