Enable Javscript for better performance
\\\"வாக்காளர் சேவை மையத்தில் தேர்தல் தகவல்களைப் பெறலாம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "வாக்காளர் சேவை மையத்தில் தேர்தல் தகவல்களைப் பெறலாம்'

    By கடலூர்  |   Published on : 20th March 2016 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்காளர் சேவை மையத்தில் தேர்தல் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பெறலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார்.

    கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வேட்பு மனு தாக்கல், வாக்குப்பதிவு இயந்திர பயன்பாடு, தேர்தல் செலவினம், சட்டம் ஒழுங்கு ஆகிய பணிகளில் அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து மின்திரை மூலம் ஆட்சியர் விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது: வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் அரசுப் பதவி வகிப்பதோ, ஒப்பந்தமோ வைத்திருக்கக் கூடாது. அரசுப் பதவி, ஒப்பந்தம் வைத்திருந்தால் பரிசீலனைக்கு முன்பாக முடித்துக்கொள்ள வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

     இந்தியக் குடிமகனாக இருப்பதோடு, வாக்காளர் பட்டியலிலும் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். தேர்தலில் தபால் ஓட்டு மிகவும் முக்கியமானதாகும். மனுத் தாக்கல் இணையதளம்  மூலமாகவும் செய்யலாம் என்பதால் அதனையும் கண்காணிக்க வேண்டும்.

     மாவட்டத்தில் இதுவரை 8,301 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் போன்றவை அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.5.69 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு அதில் ரூ.3.75 லட்சம் உரிய ஆவணங்கள் வழங்கியதால் திரும்பி ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.1.94 லட்சம் மாவட்ட கருவூல அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக 505 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 220 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 41 வெடிமருந்து கிடங்குகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

     தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்துள்ளனர்.

    ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் பொதுமக்களின் வசதிக்காக வாக்காளர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்கள், படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். கடலூர் மாவட்டத்தில் 27 பறக்கும் படைகள், 27 நிலைக்குழுக்களுக்கு மொத்தம் 54 வாகனங்கள் வழங்கப்பட்டு, அவை ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றார் ஆட்சியர். பின்னர், ஜி.பி.எஸ். கருவியின் செயல்பாடுகளையும், தேர்தல் கட்டுப்பாட்டு அறையையும் ஆய்வு செய்தார்.

     கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோ.சர்மிளா, கோட்டாட்சியர்கள் என்.உமாமகேஸ்வரி, பி.எம்.செந்தில்குமார், வட்டாட்சியர்கள் ப.காந்தி, அர.அன்பழகன், எஸ்.சிவா, கீதா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai