சுடச்சுட

  

  தேர்தல் சுவர் விளம்பரங்கள் எழுதுவதில் கட்டுப்பாடு: நகரம், பேரூராட்சிகளில் தடை

  By கடலூர்  |   Published on : 21st March 2016 07:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தலை முன்னிட்டு சுவர் விளம்பரங்கள் எழுதுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

  இதுகுறித்து மாவட்டத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் சுவர் விளம்பரம் எழுதுவது மற்றும் கொடிகள் கட்டுவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி சுவர் விளம்பரங்கள், கொடிகள் மற்றும் பேனர்கள் கட்டுவது நகரம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

   கிராமப் பகுதிகளில் மட்டும் வீட்டுச் சுவர்களில் விளம்பரம் எழுதிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் கொடிகள் மற்றும் பேனர்கள் தங்களது வீட்டிற்கு மேலே வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. சுவர் விளம்பரங்களைப் பொறுத்தவரை வீட்டின் உரிமையாளர் உரிய அனுமதி கடிதத்தை கொடுத்த பின்னரே அரசியல் கட்சியினர் விளம்பரங்களை எழுதிக் கொள்ளலாம். இந்த கடிதத்துடன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர், அந்த அனுமதி எண்ணுடன் தான் விளம்பரம் எழுதலாம். அனுமதியில்லாமல் சுவர் விளம்பரம் செய்வது, சாலையின் குறுக்கே கொடி, பேனர் மற்றும் பதாகைகள் வைப்பது குற்றமாகும். இதற்கான செலவும் தொடர்புடைய வேட்பாளரது கணக்கில் சேர்க்கப்படும்.

   கிராமப் பகுதிகளில் கல்வி, மருத்துவம், மத வழிப்பாட்டு கட்டடம், அரசு சுவர்கள், பாரம்பரியக் கட்டடங்கள், போக்குவரத்தை பாதிக்கக்கூடிய சாலைப் பகுதிகள் மற்றும் பாதசாரிகள் பயன்படுத்தும் பகுதிகளில் கண்டிப்பாக சுவர் விளம்பரம் செய்யக்கூடாது.

  கிராமங்களில் தனியார் வீடுகளில் விளம்பரம் செய்தல், பதாகை அமைப்பது தொடர்பாக தனிப்பட்ட நபருக்கு எந்தவிதமான நெருக்கடியும் செய்யக் கூடாது. எனவே, அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai