சுடச்சுட

  

  இடைநீக்கம் செய்யப்பட்ட 6 உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்கத் தடையில்லை:கடலூர் நகராட்சி ஆணையர்

  By கடலூர்  |   Published on : 22nd March 2016 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் நகர்மன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 6 உறுப்பினர்களும் நீதிமன்ற உத்தரவுப்படி வரும் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

  கடந்த பிப்.29இல் கடலூர் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில், கூட்டத்தின் மாண்பினையும், உறுப்பினர்களையும் அவமதிக்கும்படி நடந்துகொண்டதாக பாமக உறுப்பினர்கள் போஸ் ராமச்சந்திரன், டி.சரவணன், திமுக உறுப்பினர்கள் பி.நடராஜன், என்.தமிழரசன், தமாகா உறுப்பினர் கே.சர்தார், தேமுதிக உறுப்பினர் ஜி.தட்சணாமூர்த்தி ஆகிய 6 பேர், 3 கூட்டங்களில் பங்கேற்கத் தடை விதித்து நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன் தீர்மானம் நிறைவேற்றினார்.

  இதனைத் தொடர்ந்து 6 பேரும், 3 கூட்டங்களில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த 7ஆம் தேதி நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் தீர்மானத்துக்கு தடை விதித்ததோடு, அடுத்து வரும் நகர்மன்றக் கூட்டங்களில் 6 பேரும் பங்கேற்பதற்கு தடையில்லையென தெரிவித்தது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவு நகலினை 6 உறுப்பினர்களும் திங்கள்கிழமை நகராட்சி ஆணையர் ரா.முருகேசனை சந்தித்து அளித்தனர். பின்னர் நகராட்சி வளாகத்துக்குள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

  இதுகுறித்து ஆணையர் கூறுகையில், இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் 6 பேரும் அடுத்து வரும் கூட்டங்களில் பங்கேற்க தடையேதும் இல்லையென நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வரும் கூட்டங்களில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

  உறுப்பினர்கள் 6 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்ட அடுத்த சில நாள்களில் நகர்மன்ற அவசரக் கூட்டம் நடத்தப்பட்டு, 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai