சுடச்சுட

    

    நெய்வேலியில் 2 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு:என்எல்சி தலைவர்

    By கடலூர்  |   Published on : 22nd March 2016 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலி நகரியத்தை மேலும் பசுமையாக்கும் வகையில் நடப்பாண்டில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா தெரிவித்தார்.

    என்எல்சி சுற்றுச்சூழல் துறை சார்பில், நெய்வேலி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உலக வனதினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில், இயக்குநர்கள் சுபீர்தாஸ், வி.தங்கபாண்டியன், பி.செல்வகுமார், மனித வளத்துறை செயல் இயக்குநர் என்.முத்து மற்றும் என்எல்சி அதிகாரிகள் பங்கேற்று பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

    நிகழ்ச்சியில் சரத்குமார் ஆச்சார்யா பேசுகையில், ஆறுகளின் கரைகளில் மனித நாகரிகம் வளர்ந்தபோது மரங்கள் முக்கியப் பங்கு வகித்தன. ஆனால் இன்று நாகரிகம் வளர்வதற்காக மரங்கள் அழிக்கப்பட்டு, புவி வெப்பமயமாதல் போன்ற பல பக்க விளைவுகளை சந்தித்து வருகிறோம். இதனை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கை மரக்கன்றுகள் நடுவதே ஆகும். அந்த வகையில், இந்த ஆண்டில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் இத்திட்டம் வெற்றியடையும் என்றார் அவர்.

    மேலும், பூச்செடிகள், பழமரங்கள், நிழல் தரும் மரங்கள் மற்றும் மூலிகைத் தாவரங்களை ஒருங்கிணைந்து வளர்க்கும் வகையில் ஒரு திட்டத்தை உருவாக்குமாறு ஆச்சார்யா கேட்டுக்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து நெய்வேலி 2ஆவது சுரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், சுமார் 4 ஏக்கரில் 600 செம்மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் 12 ஏக்கரில் செம்மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை துணைப் பொது மேலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai