சுடச்சுட

  

  தமிழ் பிராமி எழுத்துகளுடன் மண்கலங்கள் கண்டெடுப்பு: 1800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை

  By சிதம்பரம்  |   Published on : 23rd March 2016 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை அருகே 1,800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  கோவை மாவட்டம், அன்னூர் வட்டம் சாலையூர் அருகே கெளசிகா நதியின் வடக்குக் கரையில் மண் பாண்ட ஓடுகள் காணப்படுகின்றன. கோவையைச் சேர்ந்த அத்திக்கடவு கெளசிகா நதி மேம்பாட்டு சங்கச் செயலர் செல்வராஜ் அந்தப் பகுதியில் காணப்பட்ட மண் கல ஓடுகள் சிலவற்றை சேகரித்து, தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜே.ஆர்.சிவராமகிருஷ்ணனுக்கு அனுப்பிவைத்தார்.

  அவற்றை ஆய்வு செய்ததில் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் இருப்பது தெரிய வந்தது.

  இதுகுறித்து ஜே.ஆர்.சிவராமகிருஷ்ணன் தெரிவித்தது: செங்காவி பூச்சுள்ள உடைந்த மண்கல பாகத்தின் கீழ், வட்ட வடிவிலான தாங்குப் பகுதியின் மேல் பகுதியில் நான்கு தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் உள்ளன.

  இந்த எழுத்துக்களை ஆய்வு செய்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் கண்ணன், அந்தய் என பொறிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த எழுத்துகளின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தய் என்ற சொல்லை கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த மாங்குளம் தமிழ் பிராமிக் கல்வெட்டிலும் காணமுடிகிறது.

  புறநானூறில் புலவர் பிசிராந்தையாரைப் பற்றிய குறிப்புகளை, அவரது பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

  இந்த அந்தய் என்ற பெயர் பொறிக்கப்பட்டவரின் உரிமைப் பொருளாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.

  மண் கல ஓடுகள்: கெளசிகா நதிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் கல ஓடுகளில் கருப்பு சிவப்பு நிற ஓடுகள், செங்காவி பூச்சுள்ள மண் கல ஓடுகள், வெள்ளை நிற கோடு அலங்காரங்கள் கொண்ட நன்கு மெருகேற்றப்பட்ட சிவப்பு சிற மண் கல ஓடுகள், வழுவழுப்பான கருப்பு நிற மண் கல ஓடுகள், தானியங்கள் சேமிக்கப் பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான மண்பாண்டங்களின் உடைந்த பாகங்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

  சுடுமண் குழாய்கள்: சாலையூர் பகுதியில் வாழ்ந்த பண்டையகால மக்கள் இரும்பைப் பிரித்து எடுப்பதற்காக ஊதுலை தொழில்நுட்பத்தை அறிந்திருந்தனர்.

  உதாரணமாக 15 செ.மீ. நீளம் கொண்ட சுடுமண் குழாய்களும் இந்தப் பகுதியில் கிடைத்துள்ளன. அவற்றின் மையப் பகுதி 2 செ.மீ. விட்டம் கொண்டுள்ளது. இந்தக் குழாய்கள் ஊதுலையினுள் காற்று செல்வதற்காக அதன் மேற்புறத்தில் பொருத்தப்பட்டவையாகும்.

  கற்கருவிகள்: காய்களில் இருந்து விதைகளை பிரித்து எடுக்கவும், தானிய தோலை நீக்குவதற்காகவும் இந்தப் பகுதி மக்கள் கையடக்க உருளை வடிவ கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.

  மேலும், சுத்தியல் போன்ற பயன்பாட்டுக்காகவும் கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர். இப்பகுதி கி.பி. 1, 2ஆம் நூற்றாண்டில் சிறந்த நதிக்கரை நாகரீகத் தளமாக விளங்கியுள்ளது எனலாம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai