சுடச்சுட

  

  திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்: 45 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது

  By கடலூர்  |   Published on : 23rd March 2016 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டம், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயிலில் 45 ஆண்டுகளுக்கு பின்பு பங்குனி உத்திர தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  திட்டக்குடியில் உள்ள புகழ்பெற்ற அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

  இதையொட்டி, வைத்தியநாத சுவாமி கோயிலில் சிவன், அம்மன், விநாயகர் ஆகியோருக்கு பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி உள்ளிட்டப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

  தொடர்ந்து, வைத்தியநாத சுவாமி, அசனாம்பிகை மற்றும் விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தனித்தனி திருத்தேர்களில் எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து 4 வீதிகளிலும் தேர்களை இழுத்துச் சென்றனர். அப்போது, பக்தர்கள் பலர் தேங்காய் உடைத்தும், தீபாராதனை செய்தும் வழிபட்டனர்.

  விழாவில் இந்து சமய அறநிலையத் துறை இணை இயக்குநர் சி.ஜோதி, எளம்பலூர் மகா சித்தர்கள் அறக்கட்டளை ராஜ்குமார் குருஜி, திட்டக்குடி பேரூராட்சி மன்றத் தலைவர் ஆர்.நீதிமன்னன், கோயில் ஆய்வாளர் பழனியம்மாள், நிர்வாக அலுவலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  45 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம்: கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலின் தேர் எரிந்தது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் பக்தர்கள் சார்பில் ரூ.90 லட்சம் செலவில் புதிய தேர்களை செய்யும் பணி தொடங்கி நடைபெற்றன.

  இதில் 40 அடி உயரமுள்ள சிவன் தேர், 36 அடி உயரமுள்ள அம்மன் தேர், 30 அடி உயரமுள்ள விநாயகர் தேர்கள் செய்யப்பட்டன.

  இதையடுத்து, 45 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

  சிவசுப்பிரமணியர் கோயில் தேரோட்டம்:

  கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  இந்தக் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 13ஆம் தேதி விநாயகர் விழா, புற்றுமண் எடுத்தல், விநாயகர் வீதி உலாவுடன் தொடங்கியது. விழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானை சமேதராக சிவசுப்பிரமணியர் எழுந்தருளினார். முக்கிய வீதிகளில் வலம் வந்த திருத்தேர் நிலையை அடைந்தது.

  பக்தர்கள் தேங்காய் உடைத்தும், மாலை சாத்தியும் வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வில் உற்சவதாரர்களான செங்குந்த மரபினர் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவில் சுவாமிக்கு மகா அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai