சுடச்சுட

  

  தேர்தலை முன்னிட்டு 197 ரெளடிகள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் கூறினார்.

  தேர்தலை முன்னிட்டு கடலூரில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், பறக்கும்படை உதவி ஆய்வாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு விழுப்புரம் டிஐஜி அனிதாஹுசைன் தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் முன்னிலை வகித்தார்.

  கூட்டத்தில் திருட்டு, வழிப்பறி வழக்குகளில் திறம்பட செயல்பட்ட 10 காவலர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் கூறியதாவது:

  கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள், வழிமுறைகள் குறித்து காவலர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் பணியில் மாவட்டத்திலுள்ள 2,075 காவலர்கள், 450 ஊர்க்காவல் படையினர் மற்றும் ஓய்வுபெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவத்தினரும் பயன்படுத்தப்படுகிறார்கள்.

  தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடித்திட காவலர்களின் பங்கு குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.

  மாவட்டத்தில் 189 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வருவாய்த் துறையினருடன் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

  மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்துக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு முடிவுற்ற பின்னர் அதனை பத்திரமாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுவார்கள்.

  தேர்தலை அமைதியான முறையில் நடத்திடும் பொருட்டு குற்ற நடவடிக்கைக் கொண்டவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு 197 ரெளடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

  மேலும், மதுபானம் கடத்தல், சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த 2 பேரும் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  மாவட்டம் முழுவதும் 5 சோதனைச் சாவடிகள் நிலையாக செயல்பட்டு வருகிறது. மேலும், 5 நிலை கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மாவட்டம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai