வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரம் ஆய்வு
By நெய்வேலி | Published on : 24th March 2016 05:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்களின் முதல் நிலை ஆய்வு விருத்தாசலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் வாக்களிக்கும் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களின் முதல் நிலை சோதனையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சிறந்த முறையில் தேர்தல் நடத்திட அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
வாக்களிக்கும் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரத்தின் முதல் நிலை சோதனை, பெல் பொறியாளர்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
1,350 வாக்காளர் உள்ள வாக்குச்சாவடியில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரம் பயன்படுத்தப்படும். இதுவரை 225 இயந்திரங்கள் வரப்பெற்று சோதனை செய்யப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் ரூ.8,69,500 ரொக்கப் பணமாக பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.6,75,500 உரிய ஆவணம் அளித்ததால், திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மீதியுள்ள ரூ.1,94,000 மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
2,000 மதுபாட்டில்கள், 1,000 துணிகள், 200 கிலோ அரிசி ஆகியவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 35 புகார்கள் வந்துள்ளன. அதில் 34 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உரிமம் உள்ள துப்பாக்கிகள் 227 நபர்களிடம் பெறப்பட்டு காவல் துறையினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
41 வெடிமருந்து கிடங்குகள் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பேரில் 505 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 43 தேர்தல் நடத்தை விதிமீறல்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 9,928 சுவர் விளம்பரங்கள், பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
ஆய்வின் போது விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்டாட்சியர் முரளி, அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.