சுடச்சுட

  

  உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கடலூரில் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

  ஆண்டுதோறும் மார்ச் 24ஆம் தேதி உலக காசநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மக்களிடம் காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காசநோய் மையம் மற்றும் காசநோய் தடுப்பு திட்டம் சார்பில் கடலூரில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

  முன்னாள் படைவீரர்கள் பவனில் இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணியானது பாரதிசாலை வழியாகச் சென்று அரசு பொது மருத்துவமனையில் முடிவுற்றது. இதில் கலந்துகொண்ட அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சிப் பள்ளி மற்றும் புனித வளனார் கல்லூரி மாணவ, மாணவிகள் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

  நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது: இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், சளியில் ரத்தம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது காசநோயாக இருக்கலாம். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஒரு வேளை காசநோயாக இருந்தால் தொடர்ந்து 6 முதல் 8 மாதங்கள் வரை மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மாவட்டத்தை காசநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.

  காசநோயை கண்டுபிடிப்போம், குணப்படுத்துவோம், ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்ற இந்த ஆண்டுக்கான உலக காசநோய் தின மைய கருத்தினையும் ஆட்சியர் வெளியிட்டார். பேரணியின் இறுதியில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலியும் நடைபெற்றது.

  பேரணியில் கடலூர் கோட்டாட்சியர் என்.உமாமகேஸ்வரி, இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) ச.வித்யாசங்கர், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) கே.ஆர்.ஜவஹர்லால், துணை இயக்குநர் (காச நோய்) கருணாகரன், வட்டாட்சியர் அர.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai