Enable Javscript for better performance
தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு

    By கடலூர்/நெய்வேலி  |   Published on : 26th March 2016 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை புனிதவெள்ளி அனுசரிக்கப்பட்டது.

    கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் புனித நிகழ்ச்சிகளில் ஒன்று தவக்காலம் நோன்பாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ஆவது நாளில் உயிர்த்தெழுதலை நினைவுப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தவக்கால நோன்பு தொடங்கியது. 40 நாள்கள் தொடரும் தவக்காலத்தின் நிறைவாக வரும் நாள்கள் புனித வாரமாக கடைபிடிக்கப்படும்.

    அதன்படி, புனித வாரமானது ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனியுடன் தொடங்கியது. 2ஆவது நிகழ்வாக இயேசு நாதர் தனது 12 சீடர்களின் பாதங்களை கழுவி பணிவை வெளிப்படுத்தியதை நினைவுக்கூரும் பெரிய வியாழன் மார்ச் 24ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது.

     முக்கிய நிகழ்வான இயேசுநாதர் சிலுவையில் அறையும் நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் திவ்ய நற்கருணை ஆராதனை, சிலுவைப்பாதை ஜெப வழிபாடுகளும், ஆண்டவரின் திருப்பாடு வழிபாடுகளும் நடைபெற்றன.

     கடலூரில் உள்ள புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் பாதிரியார் அன்தோணிராஜ் அடிகளார் தலைமையில், இயேசுநாதர் கடைசியாக பேசிய 7 வசனங்கள் ஆராதிக்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை ஜெப வழிபாடு நடைபெற்றது. சனிக்கிழமை (மார்ச் 26) பாஸ்கா எனும் உயிர்ப்பு நிகழ்வு, சில தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெறுகிறது. மற்ற தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் எனும் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற உள்ளது.

    நெய்வேலி:  நெய்வேலி வட்டம் 24இல் உள்ள காணிக்கை மாதா ஆலயத்தில், பங்குத் தந்தை ரட்சகர் அடிகள் சிலுவையை சுமந்து செல்ல, கிறிஸ்தவர்கள் பின் தொடர்ந்து சென்றனர். அதைத் தொடர்ந்து சிறப்புப் பிரார்த்தனை நடந்தது.

    இதேபோல், வட்டம்-4இல் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில், புனித பால் பள்ளி முதல்வர் ஆக்னலும், வட்டம் 20இல் உள்ள உலக ரச்சகர் ஆலயத்தில், ஆல்வின் அன்பரசும் சிலுவையை சுமந்து சென்றனர். மேலும், வட்டம்-28 உயிர்தெழுந்த ஆண்டர் ஆலயம், வட்டம்-30 அந்தோணியார் ஆலயம், வட்டம்-21 ஆரோக்கிய மாதா ஆலயத்திலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai