சுடச்சுட

    

    கடலூரில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் இளைஞர் இறந்து கிடந்தார். அவர் மீன் எண்ணெய் தயாரிப்பு ஆலை பிரச்னையில் காவல்துறையின் மிரட்டலுக்குப் அஞ்சி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி உறவினர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர் வட்டம் செம்மங்குப்பத்தில் மீன் எண்ணெய் தயாரிக்கும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்தப் பிரச்னை தொடர்பாக இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில், நொச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த அ.வாசுகி மகன் காரல்மார்க்ஸ் (25), திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதற்கு தனியார் நிறுவனமே காரணம் எனக் கருதிய அவரது உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காரல்மார்க்ஸின் சடலத்துடன் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், சடலத்தைக் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் நா.உமாமகேஸ்வரி தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், மதிமுக மாவட்டச் செயலர் ஜெ.ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வி.குளோப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முன்னதாக, இளைஞரின் தாயார் அ.வாசுகி கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதில், கடந்த 25ஆம் தேதி மீன் எண்ணெய் நிறுவனத்திலிருந்து துர்நாற்றம் வீசியது தொடர்பாக நிறுவனத்துக்குச் சென்று காரல்மார்க்ஸ் தட்டிக்கேட்டுள்ளார். அன்று மதியம் கடலூர் முதுநகர் போலீஸார் எனது வீட்டுக்கு வந்து காரல்மார்க்ஸ் மீது பல்வேறு வழக்குகள் போட்டு விடுவதாக மிரட்டிச் சென்றனர். மேலும், அன்று இரவு நிறுவனத்திலிருந்து வந்த 10 பேர் எனது மகனை மிரட்டிச் சென்றனர்.

    இதனால், மன உளைச்சலுக்கு ஆளான எனது மகன் தற்கொலை செய்துகொண்டார். இதற்குக் காரணமான காவல்துறையினர் மீதும், தனியார் நிறுவனம் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai