சுடச்சுட

  

  தமிழகத்தில் பெண்களால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார் திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி.

  கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அமுதாராணி தனசேகரன் தலைமை வகித்தார்.

  கூட்டத்தில், மகளிரணிச் செயலர் கனிமொழி எம்.பி. பேசியது:

  மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மின் திட்டங்கள் தொடர்பாக தமிழக முதல்வரை பலமுறை சந்திக்க முயன்றும் முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டங்களைப் பெறுவதில் தமிழக அரசு அக்கறை காட்டுவதில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட யாரும் முதல்வரைச் சந்திக்க முடியவில்லை.

  பெண்கள் சக்தி மிகப் பெரியது. பெண்கள் வாக்களித்ததால்தான் அதிமுக ஆட்சி அமைந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, பெண்களால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். மதுவால் தமிழகத்தில் சுமார் 2.50 லட்சம் இளம் விதவைகள் உருவாகியுள்ளனர். மதுவை கொண்டுவந்தது திமுகதான் எனக் கூறப்படுகிறது. 1971ஆம் ஆண்டில் மது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு, பின்னர் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், எம்ஜிஆர் ஆட்சியில் மீண்டும் மது விற்கப்பட்டது. 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் மது சில்லறை விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு, அதிகமான கடைகள் திறக்கப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

  உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தது திமுகதான். ஆனால், ஆட்சி முடியும் நேரத்தில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்திருப்பது, திமுகவின் நிலைப்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி என்றார் அவர்.

  முன்னதாக, கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மேற்கு மாவட்டச் செயலர் வெ.கணேசன், மகளிரணி துணைச் செயலர் குமாரி விஜயகுமார் ஆகியோர் பேசினர்.

  மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அமுதன் ஆராமுதன் வரவேற்றார்.

  மகளிரணி நகர அமைப்பாளர் ஆர்.முத்து நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai