சுடச்சுட

    

    வாக்கு சதவீதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியர்

    By கடலூர்  |   Published on : 29th March 2016 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கூறினார்.

    கடலூரில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தவறாது வாக்களியுங்கள், 100 சதவீதம் வாக்களியுங்கள் என்ற விழிப்புணர்வுப் பிரசாரத்தை வாக்காளர்களிடம் மேற்கொள்வது தொடர்பாக நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களது தொகுதியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

     அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், கழிவறை ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். ரயில் நிலையம், பல்பொருள் அங்காடி, நியாய விலைக்கடை ஆகியவற்றின் முன் தவறாது வாக்களியுங்கள், 100 சதவீதம் வாக்களியுங்கள் என்ற விளம்பர பேனர்களை வைக்க வேண்டும்.

     அதேபோல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கலாம். வாக்கு சதவிகிதம் குறைவாக உள்ள வாக்குச் சாவடியை கண்டறிந்து வாக்குச் சதவீதத்தை அதிகரிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் மாதிரி வாக்களிக்கும் இயந்திரத்தை மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றார்.  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் மோ.ஷர்மிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai