சுடச்சுட

  

  விவசாயத்துக்கு எதிரான திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தாது: பொன்.ராதாகிருஷ்ணன்

  By சிதம்பரம்  |   Published on : 29th March 2016 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயத்துக்கு எதிரான திட்டத்தை மத்திய அரசு ஒருபோதும் அமல்படுத்தாது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

  விவசாய சங்கத் தலைவர் கே.வி.கண்ணன் பிள்ளை எழுதிய, ஏர், நீர், பார் காக்க என்ற வேளாண் நூல் வெளியீட்டு விழா சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  காவிரி டெல்டா பாசன விவசாய விளைபொருள்கள் உற்பத்தியாளர் பாதுகாப்பு மைய பொதுச் செயலர் எஸ்.ரங்கநாதன் தலைமை வகித்தார்.

  அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.வி.கிரி, விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மு.சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் நூல் அறிமுகவுரையாற்றினார். மத்திய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நூலை வெளியிட்டு பேசியது:

  தமிழக விவசாயிகளின் பிரச்னைகளை பிரதமர் நரேந்திர மோடி முழுமையாக தெரிந்து வைத்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி அதன் பலத்தை நிரூபித்துள்ளார்.

  காவிரி நீர்ப் பிரச்னைக்கு தீர்வு காண முயன்று வருகிறார். மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

  வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட பயிர்ப் பாதுகாப்பு திட்டத்தை விரிவுபடுத்தி, புதிய பயிர்ப் பாதுகாப்பு திட்டத்தை மோடி அறிவித்துள்ளார்.

  141 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்களில் பாசன வசதி 46 சதவீதம் மட்டுமே என்பதால், மேலும் 28.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் நீர்ப்பாசன வசதி கொண்டு வரப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார். விவசாயிகள் கடன் பெற ரூ.9 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

  தமிழகத்தில் மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு போன்ற பிரச்னைகள் உள்ளன. விவசாயத்தை அழிக்கும் திட்டத்தை எந்தக் காரணம் கொண்டும் மத்திய அரசு கொண்டுவராது. மீத்தேன் திட்டத்துக்கு நிச்சயமாக ஆதரவு கிடையாது. மற்ற திட்டங்களுக்கு மாநில அரசு மற்றும் மக்களின் ஆதரவு தேவை. நான்குவழிச் சாலை அமைக்க வேண்டும் என்றால் நில ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டும். அதிக பாதிப்பில்லாத புதிய நில ஆர்ஜித திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முடியவில்லை. முன்னேற்றத்துக்காக சில இழப்புகளை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்கான அரசு மாநிலத்தில் அமைய வேண்டும் என்றார்.

  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேசுகையில், காவிரி நீரை நம்மால் சேமித்து வைக்க முடியவில்லை. 250 டிஎம்சிக்கு கையேந்தி வருகிறோம். ஆனால், ஆயிரம் டிஎம்சிக்கு மேலான நீர் வங்கக்கடலில் கலக்கிறது என்றார்.

  பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், அதிமுக அரசு செயல்படுகிறதா எனத் தெரியவில்லை. தமிழகத்தில் மத்திய அரசின்

  எல்இடி திட்டத்தை செயல்படுத்தவில்லை.

  எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாத தமிழகம், எப்படி மின்மிகை மாநிலமாக மாற முடியும் என கேள்வி எழுப்பினார்.

  நிகழ்ச்சியில், விவசாய சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ.நல்லசாமி, பி.கே.தெய்வசிகாமணி, வி.வேங்கடபதி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நூலாசிரியர் கே.வி.கண்ணன் பிள்ளை ஏற்புரையாற்றினார்.

  சென்னை பத்மா பதிப்பகம் யு.எஸ்.எஸ்.ஆர்.நடராஜன் வரவேற்றார். மிட்டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ச.மணிவண்ணன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai