சுடச்சுட

  

  கருகிவரும் முந்திரி பூக்கள்: வானம் பார்க்கும் விவசாயிகள்

  By நெய்வேலி  |   Published on : 30th March 2016 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெயிலின் தாக்கம் காரணமாக முந்திரி மரங்களில் பூக்கள் கருகி வருவதால்  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோடை மழை கைகொடுத்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

  மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி மற்றும் விருத்தாசலம் பகுதியில் சுமார் 28,500 ஹெக்டேர் நிலப் பரப்பில் முந்திரிக் காடுகள் உள்ளன. இப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 22,000 மெட்ரிக் டன் முந்திரிக் கொட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை ஆதாரமாகக் கொண்டு பண்ருட்டி பகுதியில் ஏராளமான முந்திரி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து முந்திரிப் பயிர்

  ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது.

   மேலும் முந்திரி சார்பு தொழில்களான முந்திரி எண்ணெய், புண்ணாக்கு தயாரிப்பு தொடர்பாக சிறு, நடுத்தர நிறுவனங்களும் இப்பகுதியில் இயங்கி வருகின்றன.

  இந்த நிறுவனங்கள் மூலம் கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்புப் பெறுகின்றனர். இப்பகுதி கிராமங்களின் பொருளாதார வளர்ச்சியில் முந்திரி தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

   ஆனால், முந்திரி மரங்களில் இருந்து பூக்கள் மற்றும் பிஞ்சுகள் வெளிப்படும் காலத்தில் இயற்கைச் சீற்றம், தட்ப வெப்ப மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் அவ்வப்போது பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். கடந்த 2011ஆம் ஆண்டில் தானே புயலால் பாதிப்பு ஏற்பட்டது.

  ஆனால், அடுத்த ஆண்டுகளில் ஓரளவு மகசூல், பலன் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  நிகழாண்டில் மழை கைகொடுத்ததால் முந்திரி மரங்கள் உரிய காலத்தில் பூத்துக் குலுங்கின. ஆனால், தற்போது பிஞ்சு இறக்கம் குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

  இதுகுறித்து விவசாயிகள் கானங்குப்பம் மணிவேல், காடாம்புலியூர் சரவணன் ஆகியோர் கூறுகையில், தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் முந்திரிப் பூக்கள் கருகி வருகின்றன. இதனால், எதிர்பார்த்த அளவுக்கு முந்திரிப் பிஞ்சுகள் இறங்கம் ஏற்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் கோடை மழை பெய்தால் பலன் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai