சுடச்சுட

  

  சிட்கோ சீரமைப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?

  By கடலூர்  |   Published on : 30th March 2016 06:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மற்றும் வடலூரில் செயல்பட்டு வரும் சிட்கோவில் சீரமைப்பு பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  கடலூர் செம்மண்டலத்தில் சிட்கோ தொழிற்பேட்டை கடந்த 1978ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பல்வேறு ஆண்டுகளில் இந்த தொழிற்பேட்டை விரிவுபடுத்தப்பட்டு தற்போது 20 ஏக்கரில் சுமார் 70 நிறுவனங்கள் பல்வேறு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதன்மூலம் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.

  இந்த நிலையில், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் சிட்கோவும் கடும் பாதிப்பைச் சந்தித்தது. சிட்கோவுக்குள் நுழைந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேறுவதற்கு சுமார் 40 நாள்கள் வரை ஆனது. இதனால், முழுமையாக தொழில் பாதிக்கப்பட்டது.

  ஒவ்வொரு நிறுவனமும் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இயந்திர பாகங்கள் சேதத்தையும், உற்பத்தி சேதத்தையும் சந்தித்தன. தொழிலாளர்களும் வேலை இழப்புக்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து தேவையான வடிகால் வசதி அமைக்க வேண்டும். சுற்றுச்சுவர், நுழைவு வாயில் அமைப்பு உள்ளிட்ட சீரமைப்புப் பணியில் நிர்வாகம் ஈடுபட வேண்டுமென, சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.

  இதனையடுத்து சிட்கோ நிர்வாகம் கடலூர் தொழிற்பேட்டையை ஆய்வு செய்து வடிகால் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அதற்கான பணியையும் தொடங்கியது. இப்பணியானது சிட்கோவில் சேகரமாகும் மழைநீர் வடியும் வகையில் பெரிய அளவிலான வடிகால் அமைப்பதாகும். ஆனால், இப்பணியானது முழுமையாக முடிக்கப்படும் வகையில் திட்டமிடப்படவில்லை. இதனால், சிட்கோவுக்கு எந்த பலனும் ஏற்படுவில்லையென சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

  இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.ராமலிங்கம் கூறுகையில், கனமழையால் பாதிக்கப்பட்ட சிட்கோவை பார்வையிட்ட அதிகாரிகள் ரூ.1.25 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்தார்கள். அதில், மழைநீர் வடிகால் கால்வாய், சிட்கோவுக்கு சுற்றுச்சுவர், மின்விளக்கு அமைப்பு பணிகள் அடங்கும். இதில், மழைநீர் வடிகாலானது  கடலூர்-விழுப்புரம் சாலையின் ஒருபுறத்துடன் முடிவடைகிறது. இதற்காக ரூ.50 லட்சம் செலவிடப்படுகிறது. இதனால், ஒருபயனும் ஏற்படப்போவதில்லை.

   அந்த வடிகாலானது சாலையை கடந்து மறுபுறத்தில் செல்லும் வாய்க்காலுடன் இணைக்கப்பட்டு கெடிலம் ஆற்றில் கலக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் சிட்கோ மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளப் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க முடியும். எனவே, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  அதேபோல், வடலூரில் உள்ள சிட்கோவில் செயல்படும் 40 நிறுவனங்களை நம்பி சுமார் 350 தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு சாலை மோசமாக உள்ளதால் இதனை சீரமைக்க ரூ.75 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ரூ.25 லட்சம் மட்டுமே நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே, 2 சிட்கோவையும் உரிய முறையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறும் வகையில் வலியுறுத்த வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai