சிதம்பரம் நகரில் அடிக்கடி மின்வெட்டு: வியாபாரிகள், பொதுமக்கள் அவதி
By சிதம்பரம் | Published on : 31st March 2016 05:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிதம்பரம் நகரில் அடிக்கடி அறிவிக்கப்படாமல் செய்யப்படும் மின்வெட்டினால் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சிதம்பரம் நகரில் கடந்த சில தினங்களாக அடிக்கடி அறிவிக்கப்படாமல் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
புதன்கிழமை காலை 8 மணிக்கு திடீரென மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பிற்பகல் ஒரு மணிக்குதான் மின்விநியோகம் தொடர்ந்தது.
இதேபோன்று, தினமும் பல்வேறு பகுதிகளில் திடீரென அறிவிக்கப்படாமல் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டினால் முன்னெச்சரிக்கையாக இல்லாத பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக தமிழக அரசின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் இவ்வேளையில் அடிக்கடி செய்யப்படும் மின்வெட்டினால் மாணவ, மாணவிகளும் அவதியுற்றுள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் ச.பாலசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, புதன்கிழமை பிரேக்கர் மாற்றியமைப்பதற்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது., இதுபோன்று சிறு, சிறு பணிகள் நடைபெறுவதால் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவித்தார்.
இதுபோன்ற சிறு பணிகளை மாதம் ஒருநாள் பராமரிப்பு பணிக்காக நடைபெறும் மின்நிறுத்தம் நாளன்று மேற்கொள்ளலாமே என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.