Enable Javscript for better performance
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம்: ஆட்சியர்

    By கடலூர்,  |   Published on : 28th November 2016 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் எச்சரித்துள்ளார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் ஆலிவ்ரீட்லி எனப்படும் கடல் ஆமை வகைகளின் குஞ்சு பொறிக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வகை ஆமைகளின் இனப்பெருக்கக் காலம் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலானது. இக்காலங்களில் இந்த ஆமைகள் மாவட்டத்தில் சுபஉப்பலவாடி, தாழங்குடா, தேவனாம்பட்டினம், சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, சோதிக்குப்பம், ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, கிள்ளை, டி.எஸ்.பேட்டை, புதுப்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை, சின்னூர், எம்ஜிஆர் திட்டு, பரங்கிப்பேட்டை ஆகிய கிராமங்களையொட்டிய கடற்கரை கிராமங்களில் அடைக்கலமடைகின்றன.
     அவ்வாறு அடைக்கலம் அடைந்து, இனப்பெருக்கம் செய்து கடலுக்கு செல்லும் சமயங்களில் கடலோரம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அவை அறியாமல் உண்ணாமலும், சிக்கிக் கொள்ளாமலும் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஆகையால் பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் அபாயங்களிலிருந்து கடல் ஆமைகளை காப்பாற்ற வேண்டி உள்ளது.
     10.1.2013 நாளிட்ட கடலூர் மாவட்ட அரசிதழில் வெளியான பிளாஸ்டிக்கை தடை செய்தல் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் அறிக்கை மூலம் கடலூர் மாவட்டத்திலுள்ள 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 683 கிராம ஊராட்சிகள் அனைத்திலும் அனைத்துவித தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் தடையை மீறி செயல்படுவோருக்கு அபாரதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
     அதன்படி, பிளாஸ்டிக் பைகளுக்கான தடையை மீறுபவர்களுக்கு மொத்த விற்பனையாளருக்கு ரூ.10 ஆயிரம், சில்லறை வியாபாரிகளுக்கு ரூ.ஆயிரம், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.200, உபயோகிப்பாளர்களுக்கு ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்படும்.
     அதேபோல் பொறுப்பற்ற முறையில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களின் மீது முதல் முறையாக குப்பைகளை கொட்டினால் ரூ.ஆயிரமும், இரண்டாவது முறையாக கொட்டினால் ரூ.10 ஆயிரமும், பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு ரூ.200, தனிநபர், வீடுகளுக்கு ரூ.100 வீதம் அபராதமாக வசூலிக்கப்படும்.
     எனவே மேற்கூறிய கடற்கரையோர கிராமங்கள் மட்டுமின்றி, அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுவோரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai