Enable Javscript for better performance
மாநில, மாவட்ட போட்டிகளில் வெற்றி:  228 மாணவர்களுக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    மாநில, மாவட்ட போட்டிகளில் வெற்றி:  228 மாணவர்களுக்குப் பாராட்டு

    By கடலூர்,  |   Published on : 28th November 2016 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்வித் துறை சார்பில் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 228 மாணவர்களுக்கு சனிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
     கல்வித் துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது போட்டி, தனித்திறன் போட்டி, தேசிய அறிவியல் கருத்தரங்கம் ஆகியவை அண்மையில் நடத்தப்பட்டன. பள்ளிகள் அளவில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் வென்று, பின்பு மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா கடலூரில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.பாலமுரளி தலைமை வகித்து சிறப்பிடம் பெற்ற 228 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
     அப்போது அவர் பேசுகையில், பள்ளி வாழ்க்கை என்பது மாணவர்கள் தங்களது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத நிகழ்வாகும். பாடப் புத்தகத்தில் படித்ததை வாழ்வில் செயல்படுத்தவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில் மாணவர்கள் தங்களது அறிவையும், திறனையும் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
     நிகழ்ச்சியில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது போட்டியில் மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்று, டெல்லியில் நடைபெறும் தேசிய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தேர்வான சிதம்பரம் மாணவி எஸ்.பூஜா, வடலூர் மாணவர் பிரித்விராஜன், மீனாட்சிபேட்டை மாணவி ஜெயலலிதா ஆகியோருக்கும், அதிகமான போட்டிகளில் வெற்றிபெற்ற கருக்கை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேவமோகனா ஆகியோருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது போட்டிகளில் வெற்றி பெற்ற 96 பேர், தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற 103 பேர், தேசிய அறிவியல் கருத்தரங்கம் மற்றும் நாடக விழாவில் வெற்றி பெற்ற 29 மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
     நிகழ்ச்சியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிவாணன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஆர்.முருகன், கே.தேவநாதன், தலைமை ஆசிரியர்கள் கார்த்திகேயன், கோவிந்தராஜன், பாரி, தனசேகரன், வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai