Enable Javscript for better performance
தண்ணீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க நேரடி நெல் விதைப்பு: விவசாயிகள் மும்முரம்- Dinamani

சுடச்சுட

    

    தண்ணீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க நேரடி நெல் விதைப்பு: விவசாயிகள் மும்முரம்

    By DIN  |   Published on : 08th October 2016 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் நிலவி வரும் தண்ணீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் 2.40 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காவிரி டெல்டா பகுதிகளில் 94 ஆயிரம் ஏக்கர் நெல் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    வழக்கமான காலங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு கிடைக்கும் தண்ணீரால் நடைபெறும் இப்பாசனம், தற்போது தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் இலக்கினை எட்ட முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பெ.ஹரிதாஸ் கூறுகையில், வடகிழக்கு பருவமழை வரும் 11-ம் தேதி முதல் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது விவசாயிகளிடம் நேரடி நெல் விதைப்பை பரிந்துரைத்துள்ளோம். நேரடி நெல் விதைப்புக்கு நாற்றங்கால் அமைத்தல், நாற்று நடவுக்கு தண்ணீர் கட்டுதல் போன்றவை தேவைப்படாது. இதனால் தண்ணீர் குறைவாக இருந்தாலே விவசாயம் செய்ய முடியும். மேலும் வடகிழக்குப் பருவமழை பெய்வதால் கிடைக்கும் நீர், மேட்டூரிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் ஆகியவற்றைக் கொண்டு இலக்கினை எட்ட முடியும்.
    தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் விவசாயிகள் இயந்திர நடவினை மேற்கொள்ள வேண்டும். இயந்திர நடவு மூலமாக திருந்திய நெல் சாகுபடி செய்வதால் ஆரோக்கியமான வேர் விடுகிறது.
    இதனால் அதிக தூர் ஏற்பட்டு வாளிப்பான கதிர்கள் மூலமாக நல்ல மகசூலைப் பெற முடியும். இந்த முறையினால் ஏக்கருக்கு 60 மூட்டை நெல் மகசூல் செய்ய முடியும். மேலும், இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் வரை மானியமாக அரசு வழங்குகிறது.
    எனவே, மாவட்டத்துக்கான இலக்கீட்டை அடையும் வகையில் விவசாயிகளிடம் நேரடி நெல் விதைப்பு மற்றும் இயந்திரம் மூலமான நடவினை வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai