Enable Javscript for better performance
தீபாவளிக்கு கதர் ஆடை வாங்குங்கள்: மாவட்ட ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    தீபாவளி பண்டிகை கொண்டாடுபவர்கள் கதர் ஆடைகளை வாங்குமாறு மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கதர் என்பது சுதந்திரப் போராட்டக் காலத்தில் போராட்ட வீரர்களுக்கு கிடைத்த ஒரு ஆயுதம். இன்றைய கணினி உலகில் லட்சக்கணக்கான மக்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை கதர் தொழிலால் போக்க முடியும். இதற்கு பொதுமக்கள், ஆசிரியர்கள், அரசுத் துறையில் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் கதர் ஆடைகளை வாங்கி அணிய வேண்டும். நீங்கள் வாங்கும் கதர் ஆடையில் ஏழை மக்களின் எதிர்காலம் உள்ளது.
    தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மாநிலத்தில் லட்சக்கணக்கான நூற்போர், நெய்வோர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி செய்கிறது.
    எனவே பொதுமக்கள் வாங்கும் ஆடைகளுக்கான செலவினத்தில் 1 சதவீதத்தையாவது கதர் ஆடை வாங்குவதற்கு செலவிட வேண்டும். கதர் ஆடை உடலுக்கு ஆரோக்கியம் கொடுப்பதோடு, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்றியாகவும் அமையும்.
    தற்போது தீபாவளியை முன்னிட்டு கதர் ஆடைகளுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. எனவே, கதர் ஆடைகளை பொதுமக்கள் வாங்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai