Enable Javscript for better performance
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள 262 குழுக்கள்: ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள 262 குழுக்கள்: ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 08th October 2016 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் 262 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று ஆட்சியர் த.பொ.ராஜேஷ் கூறினார்.
    வடகிழக்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் த.பொ.ராஜேஷ் பேசியதாவது: கடந்த ஆண்டு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டன. அதே போல் இந்த முறையும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள உங்களது ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
    வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மாவட்டத்தில் வட்டார அளவில் 14 குழுக்களும், குறுவட்ட அளவில் 32 குழுக்களும், கிராம அளவில் 216 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள், பொருள்கள் போன்றவற்றை வழங்குவர். மேலும், இக்குழுவினர் தலைமையிடத்திலிருந்து "வாக்கி-டாக்கி' போன்ற தொடர்பு கருவிகள் மூலம் உத்தரவுகளைப் பெற்றும், அங்கிருந்து தேவையான தகவல்களை அனுப்பியும் செயல்படுவர்.
    மேலும், அரசு அலுவலர்கள் அல்லாமல் ஊர் மக்கள், நீச்சல் தெரிந்தவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தானாக முன்வந்து உதவுபவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை இணைத்தும் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
    எனவே, மழை வெள்ளம் தொடர்பான பணிகளில் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பும் தேவை. அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும். வெள்ளத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்பவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.
    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஐயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ச.சா.குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோ.ஷர்மிளா மற்றும் 28 தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai